நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை இந்துக்களிடையே உணர்த்துவது அவசியம் (பேராசிரியர் டாக்டர் இரா. செல்வக்கணபதி.)
சைவத் திருக்கோவில்களில் பத்துநாள் பெருந்திருவிழா நடைபெரும். அதன் முதல் நிகழ்ச்சி, கொடியேற்றம். முதல் திருநாளில், சிவாலயங்களின் வாயிலில், கம்பீரமாக எழுந்து நிற்கும் கொடி மரங்களில், மந்திர உச்சாடனங்களுடன் கொடி ஏற்றப்படும். அந்தக் கொடியை உற்று நோக்கினால், அதில் நந்தியினுடைய திருவுருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சிவனுக்கு உரிய கொடி, நந்திக்கொடி. நந்தி, அதிகார நந்தி என்றும் குறிக்கப்படுவார். அவர் அதிகாரம் பெற்றுத், திருவிழாத் தொடங்கும். கொடி இறக்கத்துடன், திருவிழா நிறைவுக்கு வரும். சிவபெருமானுக்கு வாகனமும் நந்தியே. கொடிச் சின்னமும் நந்தியே. இதனைப் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில், பாரதம் பாடிய பெருந்தேவனார் பதிவு செய்துள்ளார்.நந்தியை, நந்தியம் பெருமாள் என உயர்த்திக் கூறுவது சைவ மரபாகும். நந்தியம் பெருமாள் அருள் வரலாறு குறித்தும், ஆற்றல் குறித்தும், அருட்கருணை குறித்தும் ஏராளமான செய்திகள் வடமொழி மற்றும் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. நந்தியம் பெருமாள், இடது கையில் சூலமும், வலது கையில் செபமாலையும் கொண்டவர். ஒரு குரங்கால் உன் நகர் அழியும் என்று இராவணனுக்குச் சாபமிட்டதும் நந்தி. உலகம் முழுவதும் அழிந்தொழிந்த காலத்தில், சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்து, அவர் வாகனமாக நின்று வாழ்வு பெற்றவர். நந்தியம் பெருமாள், சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்து, மலை வடிவம் பெற்று, ஸ்ரீபர்வதமாய் (இமயம்) சிவனைத் தாங்கியவர். திருமாலுக்குச் சிவபெருமானின் பெருமைகளை எடுத்து உரைத்தவர்.நந்தி என்ற பெயர், இந்திய நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டது. வட இந்தியாவில், ஓர் அரச மரபை, நந்தர்கள் எனக் குறிப்பர். நந்தி என்பது, பெண்களுக்கும் பெயராகச் சூட்டப்பட்டது. புராணத்தில், அருஷன் என்பான் மனைவி பெயர் நந்தி. பராசர முனிவரின் மகன் பெயர் நந்தி. தமிழ்நாட்டில், பல்லவ வேந்தர்கள் பலரது பெயர்களில், நந்தி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. நந்திகள் நால்வர் என்பது, திருமந்திரத்தால் தெரியவருகிறது: 1.சிவ யோக மாமுனி, 2.பதஞ்சலி, 3.வியாக்கியபாத முனிவர், 4.திருமூலர் என்போர் அவர்கள். இராமன் பாதுகையை வைத்துப் பரதன் பூசித்த இடம், நந்தி கிராமம் என இராமாயணத்தில் குறிக்கப்படுகிறது. திருத்தணிமலை ஏறும் பாறையில், நந்திக் குகை என்ற ஒரு குகை, இன்றும் உள்ளது. தென்னாட்டில், பாலாறும் வட பெண்ணை ஆறும் உற்பத்தி ஆகும் இடம், நந்தி வர்க்கம் எனப்படுகிறது. இது, மைசூர் பகுதியில் அமைந்துள்ளது. நந்தி தேவர், செந்நிறமுடையவர், முக்கண் கொண்டவர், சடை தரித்தவர், நான்கு கைகளை உடையவர். அவற்றுள், ஜெபமாலை, சூலம், அபயவரதம் காணப்படும். நந்தி தேவர் செய்த நாத ஒளியால் உண்டானது, நந்தி நாதோற்பவம் என்ற நதி. இது, காசியில் உள்ளது. ஸ்ரீஸைலத்தில், நந்திதேவர் தவம் செய்த இடம், நந்தி மண்டலம் என வழங்கப்படுகிறது.சைவ சித்தாந்தச் சாத்திரச் சொற்கள், பதினான்கு. இவற்றை, மெய் கண்ட சாத்திரம் எனக் குறித்தல் மரபு. இவற்றில், எட்டு நூல்களை இயற்றியவர் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். இவர், தில்லை வாழ் அந்தணர், திருமரபில் வந்தவர். இவர் நூல்களில் ஒன்று, கொடிக்கவி என்பது. இந்நூல் தோற்றம் கண்டமை பற்றி, ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. தில்லைச் சிற்றம்பலவனின் திருவாதிரைத் திருவிழாவின் தொடக்கமாகத், தீட்சிதர்கள், நந்திக்கொடி ஏற்ற முயன்றனர். யாது காரணத்தாலோ, கொடி ஏறவில்லை. பலவாறு முயன்றும் முடியாது போகத், தீட்சிதர்கள் திகைத்து நின்றனர். தில்லை அம்பலவன் திருவருளால், அசரீரி ஒன்று எழுந்து, யாவரும் கேட்க ஒலித்தது. "இங்கு உமாபதி வந்தால் கொடி ஏறும்" என்ற ஒலி கேட்டு, தீட்சிதர்கள் அவரைத் தருவித்தனர். தில்லைக் கூத்தன் திருவருள் நினைத்து, உமாபதி சிவம், ஐந்து திருவெண்பாக்கள் பாடினார். கொடி ஏறிற்று. அந்த வெண்பாக்களின் தொகுதியே, கொடிக்கவி என்பது. இதனைக் கொடிப்பாட்டு என்றும் குறிக்கின்றனர்.ஈழத்திலும், தமிழ்நாட்டிலும், சைவ சமய விழாக்களில், நந்திக்கொடி ஏற்றும் மரபு நிலவி வருகிறது. ஒவ்வொரு சைவர்கள் வீட்டு வாசலிலும், நந்திக் கொடி, பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். சைவர்கள், தங்கள் இல்லத்துத் திருமணங்களிலும், விழாக்களிலும், நந்திக்கொடி ஏற்றிப், பின், விழா தொடங்க வேண்டும். மாளிகைகளிலும், ஊர்திகளிலும், நந்திக்கொடி பறக்க விடப் படவேண்டும். இது சிவ நெறியாளர் இல்லம், இது சைவர்கள் விழா, சிவன் சைவன், என்பதை நந்திக்கொடி மூலம் உறுதி செய்தல் வேண்டும்.ஈழத் திருநாட்டில், நந்திக்கொடியை உலகெங்கும் பரப்பும் பெருமுயற்சியைச், சைவத் திருவாளர் எஸ். தனபால், மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார். கொழும்பில் நடைபெற்ற 2-ஆவது உலக இந்து மாநாட்டிலும், இலண்டனில் நடைபெற்ற சைவ முன்னேற்றச் சங்கக் கிளையின் வெள்ளி விழாவிலும், தனபாலாவின் தொண்டு பட்டொளி வீசியது. அவர் நன்முயற்சிகளுக்கு, நாமும் துணை நிற்போம். இந்தின் இளம்பிறையான் இன்னருள் பெருவதற்கு, நந்திக் கொடி பிடிப்போம்; நால்வர் வழிநிற்போம்!
No comments:
Post a Comment