வால்மீகியின் வாய் மொழிகள்
தாடகையின் மகனை இலக்குமணன் கொண்ட போது, “சூத்திரனைக் கொல்வது தவறில்லை'' என்று இராமன் கூறியுள்ளான். வாலியைக் கொன்ற போது விலங்கைக் கொல்வது தவறில்லை என்றான். இராமனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என இராமாயணத்தை மொழி பெயர்த்த மன்மதநாதத்தரும், சி.ஆர்.சீனிவாச ஐயங்காரும் குறிப்பிட்டுள்ளனர். சூத்திரர்கள் (உழைப்பாளிகள்) பிராமணரைத் தான் வணங்க வேண்டும். நேரடியாகக் கடவுளை வணங்கக் கூடாது என்றும் பிராமண தருமத்தை மீறித் தவம் செய்து கடவுளை நினைத்ததால் சம்புகன் கொல்லப்பட்டான். கடவுளை வணங்குவது தெய்வ நம்பிக்கை என்று உலகம் ஒப்புக் கொள்கிறது. பிறப்பால் ஒரு குறிப்பிட்ட சாதி உயர்ந்தது. அது கடவுளுக்குச் சமம் என்பதை உலகம் ஒப்புக் கொள்ளாது. இதை முதலில் ஐரோப்பியர்கள் ஏற்றுக் கொண்டு பிராமணர் காலில் விழுந்து வணங்குவார்களா? இராமாயணத்தில் தெய்வ நம்பிக்கையைக் காண முடியவில்லை. பிராமண நம்பிக்கையைத் தான் காண முடிகிறது என்கிறார்கள். விந்திய மலைக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களையே, நாகரிகம் நிறைந்த அரசுகளை நிலை நாட்டியவர்கள் எனத் தெரிந்தும் அரக்கர் என்றும் வானரம் (குரங்கு) என்றும் குறிப்பிட்டுள்ளதாக விவேகானந்தர் பி.டி. சீனிவாச ஐயங்கார், சி.சே. வர்க்கி, இராதா குமுத முகர்ச்சி, இரமேசசந்திர தத்தர் போன்ற வரலாற்றுப் பேராசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர். தென்னாட்டு மக்களை இழிவுபடுத்துவதற்காகவே வால்மீகி இராமாயணம் எழுதினார் என்பது இதனால் நன்கு புலப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தை வடமொழியில் படிக்க வாய்ப்பில்லாத காரணத்தால் பிராமணரல்லாத இந்துக்கள் எளிதில் ஏமாந்து போயினர். கடவுள் எல்லோரையும் விட பிராமணர்கள் உயர்ந்தவர்கள். எல்லா உலகங்களையும் விட இவர்கள் மேலானவர்கள். ஆதலால் பிராமணர்களைப் போற்ற வேண்டும் என வசிட்டன் இராமனுக்கு அறிவுரை கூறியது எதைக் காட்டுகிறது? இராமன் வழி நெடுக பிராமண முனிவர்களின் குடில்களிலேயே தங்குகிறான். எந்த நாகரிகமான தென்னாட்டு அரசனையும் நாடவில்லை. அயோத்தியை அடுத்துச் சோலையில் ஒரு முனிவனிடம் சென்றான். கங்கையைக் கடந்து பாரத்துவாச முனிவனிடம் தங்கினான். அங்கேயே 14 ஆண்டுகள் இராமன் தங்கியிருக்கலாம். ஏன் தங்கவில்லை? தென்னிந்தியாவில் உள்ள அரக்கர்களை அழித்துப் பிராமண தருமத்தைக் காப்பதே அவன் நோக்கம். யமுனையைக் கடந்தபின் சித்திர கூட மலைச்சாரலில் பரதன் வேண்டுகோளை மறுத்துத் தென்திசை நோக்கிச் சென்றான். தென்னாட்டில் சரபங்க முனிவரிடம் தங்கினான். 14 ஆண்டுகள் காட்டில் தவம் செய்ய வந்த இராமன் ஓரிடத்தில் தங்காமல் பொதியமலை அகத்தியரிடம் அரக்கர்புரியும் தீமையைத் தடுக்கவே நெடும்பயணம் மேற்கொண்டதாகக் கூறுகிறான். சீதையை இராவணன் எடுத்துச் செல்லாமல் இருந்திருந்தாலும் பிராமணர் நன்மைக்காக இராமன் இலங்கை வரை வந்திருப்பான். இதனால் என்ன தெரிகிறது? தென்னாட்டு மக்கள் வேத வேள்விகளை ஏற்றுக் கொள்ளாததால் அரக்கர்களாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதே. ஆரியர்களின் கொலை வேள்வியை எதிர்த்து தென்னாட்டு மக்களை அரக்கர்களாகக் காட்டும் இராமனை ஆண்டவன் என்பதும் அவன் பிறந்த நாளைக் கொண்டாடுவதும் இந்துக்களின் மீது திணிக்கப்பட்ட கசப்பான உண்மை என்பதை உலக மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். கல்வியறிவு பெற்ற இந்துக்களும் புரிந்து கொண்டார்கள் என்று கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment