Friday, January 11, 2008

Darwin's Human Development

சார்லஸ் டார்வின் அவர்கள் இன்றைய உலகச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மனிதர்கள் உட்பட உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். லண்டன் லினென் சங்கத்தில் (Linean Society) தமது 27 ஆண்டுகால ஆராய்ச்சி முடிவுகளை டார்வின் வெளியிட்டபோது, பார்வையாளர்களிடமிருந்து கூச்சலும், குழப்பமுமே வெளிப்பட்டன. டார்வினின் கருத்துகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்; அவரது கருத்துகள் நம்ப முடியாதவை, ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையல்ல எனக் கூறித் தீவிரமாக வாதிட்டனர்; டார்வினுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஏளனம் செய்தனர். ஆனால் இவற்றை எல்லாம் கண்டு மனம் தளராத சார்லஸ் டார்வின் தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உறுதியுடன் வெளிப்படுத்தினார். தீவிரமாக எதிர்த்தோர் அனைவரும், தள்ளமுடியாமல் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில், தகுந்த சான்றுகளுடனும், தாரங்களுடனும் தமது கொள்கைகளை அவர் நிறுவினார். இந்நிகழ்ச்சிகள் 1858ஆம் ஆண்டில் நடைபெற்றன; ஓராண்டுக்குப் பின்னர் கில்லர்ட் வைட் (Gillort White) எழுதிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்த சார்லஸ் டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். ஒவ்வொருவரும் பறவையியல் பற்றி ஏன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற வினா அவர் உள்ளத்தில் எழுந்தது. சிறந்த மருத்துவராக விளங்கிய சார்லசின் தந்தையார் ராபர்ட் டார்வின் தமது மகனைத் துவக்கத்தில் புகழ் பெற்ற டாக்டர் பட்லர் பள்ளியில் (Doctor Butler’s School) சேர்த்தார். அங்கு சார்லசின் கவனமெல்லாம் வர்ஜில், ஹோமர் ஆகியோரின் கவிதைகளில் ஈடுபடவில்லை; மாறாக ஆப்பிள் பழங்களைத் திருடித் தின்பது, மீன் பிடிப்பது, பறவைகளின் முட்டைகளைச் சேகரிப்பது ஆகியவற்றிலேயே அவர் ஆர்வம் காட்டினார். ஒருமுறை வீட்டின் பின்புறம் சார்லஸ் தனது அண்ணனோடு ரகசியமாக வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அதைப் பார்த்துவிட்ட டாக்டர் பட்லரின் கடுஞ் சினத்திற்கு டார்வின் ஆளானார். தனது 18ஆம் அகவையில், அதாவது 1825இல் சார்லஸ் டார்வின் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள எடின்பரோவுக்கு அனுப்பப்பட்டார். மருத்துவச் சொற்பொழிவுகளிலும், அறுவைச் சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஆனால் அமெரிக்க வனவிலங்கு ஆர்வலர் ஆடுபென் (Auduben 1785-1851) அவர்களின் சொற்பொழிவைக் கூர்ந்து கவனித்து வந்த சார்லஸ் டார்வினுக்கு, அத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது; பாறை நீரூற்றுகளைச் சுற்றி நடப்பதிலும், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிப்பதிலும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழித்தார். சார்லசின் இச்செயல்களெல்லாம், அவரது தந்தைக்குப் பெரும் ஏமாற்றத்தை விளைவித்தன; பின்னர் இங்கிலாந்து திருச்சபையில் சார்லஸைப் பாதிரியாராக ஆக்குவதற்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் மகனைச் சேர்ப்பித்தார். ஒரு வழியாக அப்பட்டப்படிப்பை நிறைவு செய்த சார்லஸ் டார்வின் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊர் திரும்பிய இரண்டொரு நாட்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியர் பீகாக் (Prof. Peacock) அவர்களிடமிருந்து சார்லசுக்குக் கடிதம் ஒன்று வந்தது. பீகிள் (Beagle) என்ற கப்பலில் இவ்வுலகம் முழுவதையும் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்வதில் விருப்பம் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் சிலர் பெயரைப் பரிந்துரைக்குமாறு பேராசிரியர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்; இவ்வாய்வில் பங்கேற்கும் ஆர்வம் உள்ளதா எனக் கேட்டுச் சார்லசுக்குப் பேராசிரியர் கடிதம் வரைந்திருந்தார். தமது தந்தைக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்பதை அறிந்த சார்லஸ் மனமுடைந்து போனார்; தமது இயலாமையைக் குறித்து வருத்தத்துடன் பேராசிரியருக்கும் பதில் எழுதினார். இவற்றையெலாம் கேள்வியுற்ற சார்லசின் சிற்றப்பா, சார்லசின் தந்தையிடம் கூறி இப்பயணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார். 1831ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் சார்லஸ் டார்வின், பீகிள் கப்பலில் ஆய்வுப் பயணத்தைத் துவங்கி 1836 அக்டோபர் 8இல் இங்கிலாந்து திரும்பினார். ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய டார்வின் புத்தறிவு பெற்றவராக விளங்கினார்; ஏராளமான ஆய்வு முடிவுகளும், உண்மைகளும் அவரது குறிப்பேட்டில் இடம் பெற்றிருந்தன. பல்வேறு புதுமைக் கண்டுபிடிப்புகளையும், பயணத்தின் போது கிடைத்த மாதிரிகளையும் சுமந்துகொண்டு டார்வின் ஊர் திரும்பினார். தென் அமெரிக்காவில் கண்ட பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தைய, நான்கு கால் விலங்கு ஒன்றின் எலும்புக்கூடு, மனித இனத்தின் துவக்க காலம் பற்றிய ஐயங்களை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தது. இம்மண்ணுலகின் பல்வகை உயிரினங்களும் இயற்கையினது பரிணாம வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியவையே என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். பழங்காலப் பாறைப் படிவங்களில் ஆய்வு மேற்கொண்டு, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே இந்நிலையை அடைந்துள்ளன என்றும், அண்டத்தில் நிகழ்ந்த மாறுதல்களின் சுழற்சியே அதற்குக் காரணம் என்றும் டார்வின் முடிவெடுத்தார்.நீண்டகாலக் கடற்பயணம் டார்வினுக்குக் கசப்பான அனுபவங்களை அளித்தது; பல்வகைக் கடல் நோய்களுக்கு அவர் ஆட்பட நேர்ந்தது. இத்தகைய இன்னல்களுக்கு இடையிலும், கப்பலின் மேல் தளத்தில் மணிக்கணக்கில் நின்றுகொண்டு, கடல் வாழ் உயிரினங்களை ஆய்வு செய்வதில் டார்வின் தளர்ச்சியடையவில்லை. பெண்டகோனியா (Pentagonia) என்னுமிடத்தில், பனிப்பகுதி சார்ந்த மிகப் பெரும் உருவமுடைய மெகாதரம் (Megatherum) போன்ற மிருகங்களை புவியின் ஆழத்தில் கண்டு பிடித்தார். இவ்வுயிரினங்கள் பின்னங்கால்களால் நிற்கக்கூடியவை; மற்றும் கிளைகள், இலைகள் வழியே தவழ்ந்து மர உச்சிக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தியராவின் (Tierra) அடர்ந்த காடுகளில் வாலில்லா மனிதக் குரங்கு ஒன்று தன் குட்டிக்குப் பாலூட்டுவதை டார்வின் காண நேர்ந்தது; பனிக் கட்டிகள் அதன் உடல் மீது விழுந்து உருகிச் செல்வதையும் பார்த்தார். இவற்றைக் கண்ட டார்வின் மனித உயிரினம் மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்ற முடிவுக்கு வந்தார். கடல்வாழ் உயிரினமான நத்தைகள் கடல்மட்டத்திலிருந்து 13000 அடி உயரமுள்ள ஆண்டெஸ் (Andes) மலையின் உச்சியில் இருப்பதைக் கண்ட டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். தென் அமெரிக்காவின் பழங்காலப் பாறைகளைக் கண்ட சார்லஸ் டார்வின் அவர்களால், உயிரினங்களின் தொடர்ந்த, படிப்படியான மாற்றங்களுக்கான இணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயணம் செய்த கப்பல் கோலா பேஜஸ் (Gola pages) தீவுகளை அடைந்தபோது டார்வின் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருந்தார்: "இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது; மாறுதல்களுக்கு உட்படும் இவ்வுயிரினங்களே மனித இனத்தின் மூதாதையர்களாகும்" என்பதே அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாயிற்று. அத்தீவுகளில் இருந்த நத்தைகள், பல்லிகள், பல்வகைத் தாவரங்கள், பருந்து வகைகள் ஆகியன இந்நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக விளங்கின. இவ்வாறு தாம் கண்டறிந்த மறுக்கமுடியாத பல உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை டார்வின் எழுதத் துவங்கினார். இந்நிலையில் 1858ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace) என்ற அறிவியலார் ஒருவரின் கட்டுரையை டார்வின் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையில் பல்லாண்டு ஆய்வுக்குப் பின் டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது; ஆனால் வாலசின் கட்டுரையில் இதற்கான அடிப்படைகள் விளக்கப்படவில்லை; இருப்பினும் இக்கட்டுரைக்குக் குறுக்கே நிற்க டார்வின் விரும்ப வில்லை. எனவே தமது கட்டுரை வெளியாகாத நிலையிலும் வாலசின் கட்டுரையை வெளியிடுவதற்கு டார்வின் இசைவளித்தார். இருவரின் கட்டுரைகளைப் பற்றியும் சங்கத்தினர் அறிந்திருந்தனர். எனவே இவர்கள் இருவருமே தமது கட்டுரைகளை லினென் (Linean) சங்கத்தில் வாசிக்கலாம் என அறிவித்தனர். இவ்வாறு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டதெனலாம். இக்கொள்கையின் திருப்புமுனையாக விளங்கிய "இயற்கைத் தெரிவின் வழி உயிரினங்களின் தோற்றம் (The Origin of Spices by Means of Natural Evaluation)" என்னும் நூலை 1859 நவம்பர் 24இல் டார்வின் எழுதி வெளியிட்டார். முதல் பதிப்பில் வெளியான 1250 படிகளும் அன்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நூலின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆல்ஃபிரெட் நியூட்டன் (Alfred Newton) பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; ஹென்ரி ஹக்ஸ்லி (Henry Huxley) என்னும் மற்றோர் அறிஞர் டார்வினின் தலைமை மாணாக்கராகவே மாறிவிட்டார். டார்வினின் கொள்கை இவ்வுலகில் ஒரு புரட்சியையே உண்டாக்கிவிட்டதெனலாம். மக்கள் தங்கள் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்; ஆனால் அவரது கொள்கை கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியல் முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்றது; அதில் கலந்துகொண்ட பழமையில் ஊறிய பாதிரியார் வில்பர்ஃபோர்ஸ் (Wilberforce) டார்வினின் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். டார்வின் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவிலலை. ஆனால் ஹக்ஸ்லியை நோக்கிப் பாதிரியார் இவ்வாறு கேட்டார்: "டார்வினைப் போன்றே, உமது மூதாதையர்களும் குரங்குகளாக இருந்தவர்களா?". ஹக்ஸ்லி உறுதியாகக் கூறிய விடை இதுதான்: "வஞ்சனையும், பயனற்ற அறிவும் கொண்ட இம்மனிதர்களோடு ஒப்பிடுகையில், குரங்குகளை என் மூதாதையராக ஏற்றுக்கொள்வதில் எவ்வித அவமானமும் இல்லை." பாதிரியார் பேச ஏதுமின்றி வாயடைத்துப் போனார். காலப்போக்கில் டார்வினின் கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடிப்படைக் காரணங்கள் இல்லாமையால் அடிபட்டுப் போனது. எனவே, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (Evolutionism) உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும், தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன என்பதை டார்வின் நிரூபித்தார். இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல என்பதும் அவரது கொள்கையாகும். வாழ்க்கையின் நிலைமைகளுக்கு ஏற்ப ஒத்துச் சென்ற உயிரினங்கள் வாழ்ந்தன; அவ்வாறு ஒத்துச் செல்ல இயலாத மற்றவை மறைந்தன. டார்வின் தமது இக்கொள்கைகளையெல்லாம் "இயற்கையின் தெரிவுமுறை (Natural Selection)", தகுதியுள்ளவற்றின் தொடர் வாழ்க்கை (Survival of the Fittest)" என்னும் இரு தலைப்புகளில் வெளியிட்டார். டார்வின் அவர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்று உலகில் மிகுந்த நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மரபியல் (Genetics), கருவியல் (Embryology) மற்றும் புதைபொருள் ஆய்வியல் (Palaeonology) ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பரிமாண வளர்ச்சிக் கொள்கைக்கு மேலும் வலுவூட்டின. தொல்பழங்காலத்தில் இவ்வுலகம் முழுதும் சடப்பொருளாயிருந்து, பின்னர் அதிலிருந்தே மனிதர் உட்பட எல்லா இயற்கை உயிரினங்களும் மலர்ந்தன என்ற உண்மை புலப்பட்டது. இயற்கையின் தெரிவுமுறை சுற்றுச்சூழலைப் பொறுத்தது என்பதை டார்வின் மிகத் தெளிவாக வலியுறுத்தினார். ஒரு பச்சைநிற வெட்டுக்கிளியை மஞ்சள் நிறப் புல்வெளியில் விட்டால் அது எளிதில் பறவைகளுக்கு இரையாகிவிடுகிறது; ஆனால் பச்சைப்புல் வெளியில் விடும் போது அவ்வெட்டுக்கிளி காப்பாற்றப்படுகிறது. இச்சோதனை வாயிலாக சுற்றுச்சூழலின் வலிமையை நிரூபித்தார். அடுத்து மெண்டலின் விதிகளும் (Mendel's Laws), தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் புரிந்து கொள்ள பெரிதும் துணை நின்றன. பயறு வகைச் செடிகளில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல் வியப்பூட்டும் முடிவுகளைக் கண்டறிந்து வெளியிட்டார். ஏற்கனவே பெட்டாசன், திப்ராய் ஆகியோர் இத்துறையில் ஆய்வுகள் நடத்தியபோதும் அவர்களால் இயற்கையின் தெரிவு முறை பற்றி ஐயத்திற்கிடமின்றி முடிவுகளை வெளியிட இயலவில்லை. ஆனால் மரபியல், குரோமோசாம்கள், மரபணுக்கள் ஆகியன பற்றிய மெண்டல் விதிகளுக்கான அடிப்படைகளை மோர்கோன் அவர்கள் தெளிவுபடுத்தி ஐயங்களைப் போக்கினார். பெற்றோரின் மரபியற் குணங்கள் பிள்ளைகளிடம் அல்லது அவர்களது வழித்தோன்றல்களிடம் இருப்பது பாலில் நீர் கலந்திருப்பது போன்றதாகும் என டார்வின் கருதினார். அது மட்டுமல்லாமல் இந்த அண்டத்தில் வாழும் பல்வகைப்பட்ட உயிரினங்களுக்குள், வேற்றுமைகளுக்கிடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன என்பதும் அவரது கருத்தாகும்.

No comments: