Saturday, January 5, 2008

Vedantham Vs Sithantham

வழக்காளியாக ஒரு முறை தமிழ் நாட்டு நீதி மன்றம் ஒன்றில் அமர்ந்திருந்த ஆறுமுக நாவலர், அவர் வழக்கின் எதிரி வந்ததும், எழுந்து மரியாதை செலுத்தினாராம்! எதிரி வேறு யாருமல்ல; இராமலிங்க சுவாமிகள் தான்! இப்படி முழு நீதிமன்றமுமே எழுந்து மரியாதை செலுத்தும் அளவுக்கு மதிப்புடைய ஒருவருக்கு எதிராக, நாவலர் வழக்குத் தாக்கல் செய்திருந்ததற்கான காரணம், இன்று நேற்றுத் தோன்றிய ஒரு சிக்கல் இல்லை; பல கால மாகவே, நாவலர் போன்ற சித்தாந்திகளுக்கும், இராமலிங்கர் போன்ற வேதாந்திகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் சொற்போரின் ஓர் அங்கம் என்றே சொல்லலாம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இந்துக்கள் மத்தியில் நடக்கும் ஒரு வகை வாதங்கள் போற்றோன்றும்! ஆனால் துல்லியமாகப் பார்த்தால், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய இரு மதங்களுக்கு மிடையிலான சொற்போர் என்பது புலனாகும்!மகா பாரதத்தை எழுதிய வியாச முனிவர் காலத்திற்கு முற்பட்ட சிக்கல் எனறு கூடச் சொல்லலாம். இப்போது நடக்கும் சர்வசித்து ஆண்டைக் கலியுகம் 5109 என்று கணிக்கிறார்கள். துவாபர யுகத்தின் பிற்பகுதியிலும், கலியுக ஆரம்பத்திலும் வாழ்ந்த வியாசர், பஞ்சாங்கங்களின் கணக்குப்படிப் பார்த்தால், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். அவரது காலத்திலும் அதற்கு முன்பும் வேத உபநிடதங்கள் கூறும் கருத்துக்கள் பற்றிய வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும்! அதனால் அவர் வேத உபநிடதங்களுக்கு விளக்கம் அளித்து, பிரம்ம சூத்திரம் எனும் நூலை எழுதினார். அதன் பின் அவரது நூலுக்குப் பாடயம் எழுதியவர்கள், வேதாந்தம் சித்தாந்தம் என்று இரு மதங்கள் உருவாக வழி வகுத்து விட்டார்கள். அவர்களில் முக்கியமானவரான சங்கரரின் பாடியமே இன்றைய வேதாந்த மதத்திற்குப் பிரமாணமாக அமைகிறது. வேதாந்தத்தை விளக்க, வேதாந்த சூடாமணி, விவேக சூடாமணி, ஞானவாசிட்டம் என்று 16 நூல்கள் இருந்தாலும், அவற்றுள் பகவத் கீதையே பலரால் அறியப்பட்ட நூல்.சித்தாந்திகள், வேதாந்திகள் என்ற பிரிவு உருவாக, வியாசர்தான் காரணம் என்று, பழியை அவர் மேல் போட்டு, அவரை வேண்டுமென்றால், முனிவர் என்று அழைக்கலாம்; எக்காரணத்தைக் கொண்டும் ஞானி என்று அழைக்கப்படும் தகைமை அவருக்கு இல்லை என்று இழிவு படுத்துகிறார்கள். வேத, உபநிடதங்களுக்கிடையில் ஞானம் முக்கியமா, கன்மம் முக்கியமா என்ற கேள்விக்குத் தெளிவான விடை இல்லாத நிலையாற்றான் இரு பிரிவு உருவானது என்பதை ஒப்புக் கொள்கிறார்களில்லை.சித்தாந்தத்தின்படி, ஆகமங்கள் இறைவனால் அருளப்பெற்றவை. ஆகையால், பெரிதாக அவைபற்றி எதுவும் வாதாட முடியாது. தத்துவ விளக்கம் தரும் திருவருட் பயன், சிவஞான போதம், சிவப்பிரகாசம் போன்ற 14 சாத்திரங்களையும், வழிபாட்டுக்குத் தேவையான 12 தோத்திரங்களையும் (அதாவது தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற திருமுறை களையும்) கொண்ட ஒரு வளமான பிரிவு.இதில் எந்தப் பிரிவு சிறந்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்வது முடியாத செயல். "என்ன, வேதாந்தம் பேசுகிறாய்" என்று சாதாரணமாகக் கேட்டால், அதன் அருத்தமே "வறட்டுத் தத்துவம் பேசுகிறாய்" என்பதே! அந்த அளவுக்கு உள்ளே எதுவும் இல்லை என்று சாதாரண மக்கள் கருதுவதுதான் வேதாந்தம். உலகத்தைத் தோற்றம் என்கிறது; இறுதியில் தான் அந்தத் தோற்றம், பிரமத்தின் தோற்றம் என்கிறது. இது எளிதில் புரியக்கூடியதாகவா இருக்கின்றது?ஆனால் சித்தாந்தம், பதி, பசு, பாசம் என்கிறது. மூன்றுமே அநாதி என்கிறது. யோக முத்திரை மூலம் எளிய, தெளிவான விளக்கம் தருகிறது. கையின் மற்றைய மூன்று விரல்களுடன் நிற்கும் பசுவாகிய சுட்டு விரல், பதியாகிய பெருவிரலுடன் சேரும் போது, முக்தி என்கிறது. அற்றது பற்றெனில், உற்றது வீடு. முன் வினையும் இங்கு வருகிறது. அந்த வினைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறின், சித்தாந்தி இல்லை. இதனாற்றான் சித்தாந்திகள் சாதிக்கொடுமையை முன் வினையின் பயன் என்று தட்டிக் கழித்தனரோ?

No comments: